Saturday, August 18, 2018

இனி கொழும்பை நாடவேண்டிய அவசியமில்லை – இரு அமைச்சுக்கள் மேற்கொண்டுள்ள மாற்று நடவடிக்கை

, 18 AUGUST 2018 -

இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் கைச்சாத்திட்டுள்ளன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறைமையினூடாக வழங்கப்படுகின்ற ஆவண சான்று உறுதிப்படுத்தல் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலி மாவட்டத்திலுள்ள 19 பிரதேச செயலகங்களில் ஒரு ஆரம்ப திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வசதியை இலங்கையிலுள்ள 332 பிரதேச செயலகங்களுக்கும் விஸ்தரிப்பதிற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனூடாக பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆவணப்படுத்தல் கருமங்களை கொழும்பிலுள்ள சேவை பிரிவை நாடாமல், தமக்கு மிக நெருக்கமான பிரதேச செயலகங்களில் பூர்த்தி செய்து கொள்வதனை சாத்தியப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்திலுள்ள பிராந்திய சேவை அலுவலகத்தை நாடும் வட மாகாண மக்கள்கூட, இந்த பிராந்திய சேவை அலுவலகத்திற்கு பதிலாக தமக்கு அருகாமையிலுள்ள பிரதேச செயலகங்களுடாக சான்று உறுதிப்படுத்தல் பணிகளை செய்து கொள்ள முடியுமாக இருக்கும்.

இதன் ஆரம்பத் திட்டத்திற்கு கனடா அரசாங்கம் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பினூடாக 6.8 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகளை அன்பளிப்புச் செய்திருக்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கருத்து வெளியிட்ட உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன, இந்தத் திட்டத்திற்கு அவசியமான பங்களிப்பை விஸ்தரிக்குமாறு அனைத்து அரச பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேநேரம், இந்த முறைமையின் ஊடாக பாரியளவு அந்நிய செலாவனியை நாட்டிற்கு ஈட்டித்தரும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூகத்திற்கு வினைத்திறனான சேவையாற்ற முடியும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் இதன்போது தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment