Sunday, August 19, 2018

ஆபாச பாடல்களை பஸ்களில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை

August 19, 2018

ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவதை தடுக்க வேண்டும் என வடக்கு முதலவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், “பயணிகளின் சௌகரியத்திற்காகவும், மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமாப் படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்கது.

ஆனால் இப் பாடல்கள் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய அறிவு சார்ந்த பாடல்களாக அமைந்திருப்பதே பொதுவாக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை ஒலிபரப்புவதை அனைத்து பஸ் உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து தடுக்கலாம்.

அதே போன்று வாள்வெட்டு கலாசாரங்கள், ரவுடித்தனங்கள், சோம்பல் தன்மைகளைப் பிரதிபலிக்கும் படங்களைத் தவிர்த்து கருத்தாழம் மிக்க நகைச்சுவைகளுடன் கூடிய பல நல்ல படங்களைக் காட்சிப்படுத்துவதையே எமது மக்கள் விரும்புகின்றார்கள்.

படங்களையும் பாடல்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பொறுப்புள்ளவர்களிடம் விட்டால் பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் வெட்கப்படத்தேவையில்லை என்று கருதுகின்றேன்.

பஸ்களில் பயணம் செய்யும் பலரின் கருத்தையே இங்கு நான் பிரதிபலிக்கின்றேன். உங்கள் சாரதிய ஒழுங்கும் மக்கள் பாதுகாப்பும் 100 சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஒன்று இரண்டு விபத்துக்களைக் கூட இல்லாதொழிப்பதற்கு நீங்கள் பாடுபடவேண்டும்.

சுமார் 20-30 வருடங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் சிறந்த சாரதிகளாக இனங்காட்டப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலையில்லை.

போட்டித் தன்மை காரணமாக வீதி ஒழுங்கு சைகைகள், சமிக்ஞைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து நினைத்தவாறே நிறுத்துவது, எடுத்த மாத்திரத்தில் இயக்குவது, பின்பார்வை கண்ணாடிகளை முறையாக உற்று நோக்காது இயக்குவது போன்ற பல குறைபாடுகள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது” என முதலமைச்சர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment