Saturday, August 18, 2018

துருக்கி - அமெரிக்கா இடையே என்ன நடக்கிறது? அந்த முக்கிய 3 காரணங்கள் இவைகள் தான்!

Comment

அமெரிக்க - ஐரோப்பிய நேச நாடுகளின் கூட்டணியான நேட்டோ படையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கிடையில் நடக்கும் பனிப்போர்  உலகை மற்றொரு பொருளாதார மந்தத்தை நோக்கி இழுத்து செல்கிறது.

மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் துருக்கியைக் கபளீகரம் செய்வதற்கான வேலைகளை அமெரிக்கா முழுவீச்சில் ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் விருப்பத்துக்கு இணங்காமல் செயல்படும் துருக்கியை வழிக்குக் கொண்டு வர, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் இரும்பு பொருட்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. இதனால் துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைய ஆரம்பித்தது. கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் மட்டும் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு சுமார் 45 சதவீதம் வீழ்ச்சியினைச் சந்தித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதும் துருக்கி தடைவிதித்து பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் ஐஃபோனை கொரியாவின் சாம்சங்கும் துருக்கியின் ப்ராடக்டும் ஈடுகட்டும் எனவும் கூறியுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் அப்படி என்னத்தான் பிரச்சனை?

கடந்த 2016 ஜூலை 15 ஆம் தேதி, எர்தோகன் தலைமையிலான அரசைக் கவிழ்க்க துருக்கி இராணுவத்திலுள்ள ஃபெதுல்லாஹ் குலனின் ஆதரவாளர்கள் நடத்திய முயற்சி பொதுமக்கள் துணையுடன் முறியடிக்கப்பட்டது.

இதற்காக துருக்கி கொடுத்த விலை 241 அப்பாவி பொதுமக்களின் உயிர்கள். இதில் சுமார் 3000 பேர் படுகாயமுற்றிருந்தனர்.

தம் சொந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மீதே குண்டுவீசிய துருக்கி இராணுவம் மற்றும் அரசில் முக்கிய பொறுப்புகளிலிருந்த அதிகாரிகள், காவல்துறையினர், ஆசிரியர்கள் என அந்த இராணுவச் சதியில் தொடர்புகொண்டிருந்த சுமார் 50,000 நபர்களைத் துருக்கி அரசு கைது செய்து சிறையிலடைத்தது.

இந்தச் சதியினைச் செயல்படுத்த துணைபுரிந்த ஆன்ட்ரியூ என்ற அமெரிக்க பாதிரியார் உட்பட அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய மூவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியது துருக்கி. இதில், பாதிரியார் ஆன்ட்ரியூவிற்கு 35 ஆண்டுகால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா, பாதிரியார் ஆன்ட்ரியூவை விடுவிக்க துருக்கியை நிர்பந்தித்து வருகிறது.

அது மட்டுமன்றி, துருக்கி அரசைக் கவிழ்க்க இராணுவத்தைத் தூண்டிய ஃபெதுல்லாஹ் குலனைக் கைது செய்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற துருக்கியின் கோரிக்கையினை அமெரிக்கா இந்நிமிடம் வரை நிறைவேற்றவில்லை. குலன் மீதான குற்றத்தை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரத்தைத் துருக்கி தரவில்லை என அமெரிக்கா கூறுகிறது(அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சுமத்திய ஒசாமா பின் லேடனை ஆப்கானின் தாலிபான் அரசு,போதுமான ஆதாரம் அமெரிக்கா தரவில்லை எனக்கூறி மறுத்தக் காரணத்துக்காகவே ஆப்கான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது நினைவில் கொள்ளத்தக்கது)

இராணுவ சதிக்குப் பின்னர், துருக்கிக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவு வழங்கின. இதில், துருக்கியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான குர்திஸ்தான் படைக்கு ஆதரவு தெரிவிக்கும் குர்திஷ் மக்கள் ஜனநாயக கட்சி மட்டும் ஆதரவளிக்கவில்லை. துருக்கியின் தென் எல்லைப்பகுதியில் சிரியாவிலிருந்து ஊடுருவும் குர்திஷ் படைகளுக்கும் இந்தக் கட்சி உதவி வந்த நிலையில், சிரியாவின் வடக்கு எல்லையில் குர்திஷ்களை முழுமையாக ஒழிக்கும் வேலையில் துருக்கி அரசு இறங்கியது.

சிரியாவில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பை ஒழிக்க, அமெரிக்கா இந்த குர்திஷ் அமைப்பிற்கு ஆயுதமும் பணமும் வழங்கி வந்த நிலையில், குர்திஷ்களை அப்பகுதியிலிருந்து முழுமையாக ஒழித்துக்கட்டும் வேலையில் துருக்கியும் இறங்கி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றது அமெரிக்காவைக் கடும்கோபம் கொள்ள செய்தது.

இதிலும் அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் பகைமை அதிகரித்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து உயர் பாதுகாப்புரக விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திட்டது அமெரிக்காவைக் கடும் சினத்திற்குள்ளாக்கியது. இந்த ஒப்பந்தத்திலிருந்து எர்தோகன் விலகவேண்டுமென பகிரங்கமாகவே ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். எங்கள் நாட்டு இறையாண்மையை எவர் காலடியிலும் சமர்ப்பிக்க முடியாது என்றும் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிட எவரையும் அனுமதிக்கவும் மாட்டோம் எனவும் எர்தோகன் அதற்குக் கடுமையான முறையில் பதிலடியும் கொடுத்திருந்தார்.

ஆக,

1. 2016 ஜூலை இராணுவ சதியில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிடப்பட்டிருக்கும் பாதிரியார் ஆன்ட்ரியூவை விடுவிக்க வேண்டும்

2. சிரியாவில் குர்திஷ்களுக்கு எதிராக துருக்கி எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

3. ரஷ்யாவிடமிருந்து உயர் பாதுகாப்பு விமானங்களை வாங்கக்கூடாது

ஆகிய அமெரிக்காவின் மூன்று கோரிக்கைகள் விசயத்தில், துருக்கி எடுக்கும் முடிவினைப் பொறுத்தே தற்போதைய பிரச்சனை முடிவுக்கு வரும்.

படங்கள் : 2015 ஜூலை 15 ல் நகர வீதியினுள் இறங்கிய இராணுவத்தை எதிர்கொண்ட பொதுமக்கள், அமெரிக்காவில் தங்கியுள்ள கோடீஸ்வரர் ஃபெதுல்லாஹ் குலன்
(அப்துர் ரஹ்மான்)

0 comments:

Post a Comment