Sunday, July 1, 2018

முஸ்லிம் எம். பிக்கள் முன்னுள்ள, வரலாற்றுப் பொறுப்பு"

."


July 01, 2018


மாகாணசபைத் தேர்தல் எவ்வாறு எப்போது நடத்துவது என்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்று விரைவில் கூட்டப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் வியாழனன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கலந்துகொண்ட கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாகாண சபைத் தேர்தல் முறை தொடர்பான முக்கிய விவாதம் ஒன்று எதிர்வரும் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் முன்பிருந்த விகிதாசாரத் தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் வலியுறுத்த, புதிய முறையில் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் விருப்பம் என மாகாணசபைகள் உள்ளூராட்சி, விளையாட்டுத்துறை அமைச்சர் கூறி வருகிறார். இரு பிரதான கட்சிகளுக்கிடையே இந்த விடயம் ஒரு பனிப்போராக மாறியுள்ளது.

புதிய தேர்தல் முறைக்காக பிரிக்கப்பட்டுள்ள தொகுதிமுறை வடக்கு கிழக்குக்கு வெளியே  சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களைப் பாதிக்கும் என்பதனால் எல்லை நிர்ணயக் குழுவில் பணி புரிந்த முஸ்லிம் சமூகப் பிரதிநிதியான பேராசிரியர் எச்.எஸ். ஹிஸ்புல்லா புறம்பாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பல கலப்புத் தேர்தல் முறையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 25 தேர்தல் மாவட்டங்களில் 18 தேர்தல் மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களது பிரதிநித்துவத்தைப் பாதுகாப்பதற்கு பல மாவட்டங்களில் தான் பிரேரித்த பல அங்கத்தவர் தொகுதி முறையையும் தவலிங்கம் தலைமையிலான தொகுதி நிர்ணயக் குழு நிராகரித்ததாகவும் கலாநிதி ஹிஸ்புல்லா சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்தல் தொகுதி முறையில் திருத்தங்கள் மேற்கொண்டாலன்றி முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே அமையும்.

இந்த இடத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரதிநிதிகள் முன் மகத்தான ஒரு பொறுப்புள்ளது. தொகுதி முறையில் மாற்றங்களை வென்றெடுக்க முடியாவிடில் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும்.

மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சராக இருக்கும் பைசர் முஸ்தபாவுக்கு இந்த விடயத்தில் பாரிய பொறுப்பொன்றுள்ளது என்பதனை இங்கு விசேடமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதிகாரப் பரவலாக்கத்தின் முக்கிய அங்கமாகவுள்ள மாகாண சபைகளில் 18 மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் போகுமாயின் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படப்போகும் பாதிப்பு சொல்ல முடியாத அளவாகும்.

எனவே பாராளுமன்றத்திலுள்ள 21 முஸ்லிம் எம். பிக்கள் முன்பும் ஒரு பெரும் பொறுப்புள்ளது. அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து போதிய முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகும் ஒரு முறை அல்லது பழைய விகிதாசார தேர்தல் முறையில் தேர்தல் நடத்தி வைக்க வேண்டும். இதில் கோட்டை விட்டால் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை விட்டவர்களாக 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயரும் வரலாற்றில் பதிவாகும்.

0 comments:

Post a Comment