Tuesday, November 20, 2018

தமிழ் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்க வேண்டியதில்லை

November 21, 2018 -

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையில்லாமல் ஐ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லையென வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் கூறியதாவது,..

சமகாலத்தில் உள்ள அரசியல் நிலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேச கூடிய சக்தியுடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதா? ரணிலை ஆதரிப்பதா? என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை.

எவரை ஆதரித்தால் தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது தீர்க்க முடியுமா? என்பதையே பார்க்கவேண்டும். வெறுமனே பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு ஐ.தே.கட்சியை அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடியாது.

நிபந்தனையை ரணில் விக்கிரமசிங்கவிடம் மட்டும் விதிக்கவேண்டும் என அவசியம் இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் கூட விதிக்கலாம். அதை விடுத்து கண்ணை மூடி கொண்டு எவரையும் ஆதரிக்கவேண்டிய அவசியம் கிடையாது.

அதேபோல் எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வை கேட்காவிட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், வடகிழக்கு மாகாணங்கள் இணைப்பு போன்ற விடயங்களையாவது முன்வைத்து உடனடி தீர்வைக் கோரவேண்டும்.

இவ்வாறான நிபந்தனைகளை விதிக்காமல் ஆதரவளிப்பது என்பது அர்த்தமற்ற ஒன்றாகும். ஆக மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வும் கிடையாது, இவ்வாறான சில பிரச்சினைகளுக்கான தீர்வும் கிடையாது என்றால் என்ன பயன்?

எனவே இது தொடர்பாக மக்கள் முதலில் விழிப்பாக இருக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment