Tuesday, November 6, 2018

சம்பந்தனின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – மைத்ரீ

November 6, 2018

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடைய கோரிக்​கைகளோடு தான் முழுமையாக ஒத்துப்போவதாகவும் இந்நாட்டில் அனைத்து மக்களும் சம உரிமையோடு வாழவேண்டும் என்ற மனோநிலையில் தான் உறுதியாக இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய தீபாவளி விழா ஜனாதிபதியின் தலைமையில், நேற்று (05), ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகள் விடுதலை, அரசியல் தீர்வு போன்றவற்றை நாடாளுமன்றத்தின் ஊடாகவே சாத்தியப்படுத்த முடியும் என்பதை தான் பல முறை சுட்டிக்காட்டிய போதும் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்திலோ, தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்திலோ எவரும் அக்கறைக் காட்டவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்குள் தலையிடும் அதிகாரம் தனக்கில்​லை என்று தெரிவித்த அவர், ஆகையினால் தான் சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தைத் தீர்க்கக்கூடிய வல்லமை இருந்தும் தீர்க்காமல் இருந்தமை குற்றமாகும் என்றும் அவர் கூறியதோடு, எனவேதான், அவர்களை வெளியேற்றி, புதிய​தொரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தனின் வேண்டுகோளுக்கேற்ப எதிர்வரும் தீபாவளிக்குள் அரசியில் கைதிகள் விவகாரத்துக்கும் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு விடயத்துக்கும் தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதிமொழியை, இன்றைய தினத்தில் வழங்குவதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

0 comments:

Post a Comment