04.10.2018
வடக்கில் உள்ள 53 காவல்துறை பிரிவுகளில் நான்கு காவல்துறை பிரிவுகளில் மாத்திரமே ஆவா குழுவின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் முதலான நான்கு காவல்துறை பிரிவுகளிலேயே இந்த ஆவா குழுவின் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில் கொழும்பில் உள்ள அமைச்சில் இன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே இந்த விடயத்தை தெரிவித்த வட மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர், நாட்டின் ஏனைய பகுதிகளைப் போல வடக்கின் நிலைமையும் அமைதியாக உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆவா குழு 2011 ஆம் ஆண்டில் உருவான நிலையில், சில தலைவர்கள் அதில் உருவாகி, பல்வேறு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வடக்கில் தனிப்பட்ட வன்முறைகள் காரணமாக இரண்டு பேர் மாத்திரமே உயிரிழந்துள்ள நிலையில், ஆவா குழுவினால் எந்தவொரு கொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், இடம்பெற்றுள்ள சிறு சம்பவங்கள் குறித்து கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரியவர்கள், அந்தந்த சம்பவத்தின் தன்மைகளின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு விடுவிக்கப்படுபவர்கள் மீளவும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆவா குழு தொடர்பில் காவல்துறையினர் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில், ஆவா குழுவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதுடன், அது தற்போது பலமிழந்துள்ளது.
இதனால், குழுவிலிருந்து பிரிந்து வெளியேறியவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களைத் தவிர வட மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை நல்ல நிலையில் உள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேநேரம், ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்களின் புகைப்படங்களையும், குறித்த ஊடக சந்திப்பில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
தொழில்வாய்ப்பின்மை மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் பணம் அனுப்புகின்றமை முதலான காரணிகளே வடக்கில் இடம்பெறும் வன்முறைகளுக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் தற்போது 6 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அவர்களைக் கொண்டு இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுபடுத்த இராணுவத்திற்கு அதிகாரம் தேவை என இராணுவத் தளபதி விடுத்த கோரிக்கை தொடர்பில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்துள்ள வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர்,
வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை இராணுவம் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்காலாம்.
எனினும், காவல்துறையினர் அதனை தங்களின் கண்ணோட்டத்தில் பார்த்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இதனால், இராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கருத வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment