August 3, 2018
ஆளும்தரப்பில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளுக்கு முன்னுரிமையளித்து செயற்பட்டுள்ளேன். இதனை இன்றிருக்கும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஞாபகப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
திவுலங்கடவல மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொலன்னறுவை மாவட்டத்திலும் நீண்டகாலமாக இவ்வாறான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நாட்டு மக்கள் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தபோது பொலன்னறுவை மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் உள்ள மக்கள் கட்சி பேதமின்றி எனக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தந்தார்கள். பிரதேசத்துடனான எனது தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல.
1989ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் என்ற வகையில் எனக்கு கிடைத்த 25 இலட்சம் ரூபாவில் பாடசாலை இல்லாமல் இருந்த விகாரகமவில் புதிதாக ஒரு பாடசாலையை அமைத்தேன். பொதுவாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அவ்வாறானதொரு வேலையை செய்வது இலகுவானதல்ல.
நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வகையில் அன்று அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு நான் ஒத்துழைப்பாக செயற்பட்டேன். எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற எனது வகிபாகத்தையும் நான் கைவிடவில்லை. அக்காலத்தில் நான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கின்ற ஒருவன்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்விமான்கள் மிகப் பெரும் பலமாகும். தேசத்தின் எதிர்காலத்திற்கு கல்விகற்ற மக்களை உருவாக்குவது அத்தியாவசியமாகும். மக்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றபோது ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். வறுமை, நோய்கள், இன்னும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வியின் மூலம் கிடைக்கும் அறிவும், தெளிவும் முக்கியமானதாகும்.






0 comments:
Post a Comment