05.07.2018
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், அடையாளம் காணப்பட்டுள்ள ஆவாக் குழுவை முற்றாக ஒழிக்கும் நோக்கிலும் சிறப்புப் பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் விடுமுறைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து பொலிஸார் மேலதிகமாக யாழ்ப்பாணத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தச் சிறப்பு நடவடிக்கைகள் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோவின் மேற்பார்வையில், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் பாதாள உலக ஒழிப்புப் பிரிவை வழி நடத்திய தற்போதைய யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் நேரடிக் கட்டுப்பட்டில் இடம்பெறவுள்ளன.
‘தனு ரொக் என்ற குழுவொன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லை. அந்தக் குழுவில் இருந்தவர்கள் திருந்தி சாதாரண வாழ்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைச் சீண்டும் வகையில் அவர்களது உறவினர்கள், வீடுகள் மீது தாக்குதல்களை ஆவாக் குழு முன்னெடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தக் குழுவினரைக் கட்டுப்படுத்தவே இந்தச் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது’ என்று மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment