Wednesday, July 25, 2018

நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம்

25.07.2018

முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியிலிருந்து, அவருடைய சொந்த பிரதேசமான அட்டாளைச்சேனைக்கு ஒதுக்கியிருந்த 14 லட்சம் ரூபாய், இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத் தரப்புகளும் இதனை புதிது செய்தித்தளத்துக்கு உறுதி செய்தன.

ஏ.எல்.எம். நசீர் ஒதுக்கிய மேற்படி நிதியினை மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இடைநிறுத்தியுள்ளதாகவும், அதனை வேறு பகுதிகளுக்கு பயன்படுத்த ஹக்கீம் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மேற்படி 14 லட்சம் ரூபா நிதியினையும், நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் பகிர்ந்தளிப்பதற்கான திட்டத்தினை முன்வைத்திருந்த நிலையிலேயே, அது – இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் தனது நிதியினை பகிர்ந்தளிப்பதற்கு சமர்ப்பித்திருந்த திட்டத்தின் விபரம் வருமாறு;

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் கொள்வனவு செய்வதற்காக 50ஆயிம் ரூபா.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு உள்ளக நீர் இணைப்பு வழங்குவதற்கு 01 லட்சம் ரூபா. குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு குக்கர் சாதனங்களை வழங்கும் பொருட்டு, அட்டாளைச்சேனையிலுள்ள மறுமலர்ச்சி எனும் அரச சார்பற்ற நிறுவனத்துக்கு 03 லட்சம் ரூபா.

அட்டாளைச்சேனை – ஆலங்குளம் பகுதியிலுள்ள கிராமிய அபிவிருத்தி பெண்கள் சங்கமொன்றுக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்க 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபா. அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவிலுள்ள குளோபல் மீடியா நிறுவனத்துக்கு போட்டோ பிரதி இயந்திரம், கணிணி மற்றும் பிரின்டர் சாதனங்களை வழங்குவதற்காக 03 லட்சம் ரூபா. அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு ஜலால்தீன் வித்தியாலயத்துக்கு சுற்று மதில் நிர்மாணிப்பதற்காக 04 லட்சம் ரூபா.
அட்டாளைச்சேனை 11ஆம் பிரிவில் அமைந்துள்ள விளையாட்டு மத்தியஸ்தர் நலன்புரி அமைப்புக்கு பயிற்சி சாதனங்களை வழங்க, 01 லட்சம் ரூபா.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கான தனிப்பட்ட உத்தியோகபூர்வ ஆளணியினர் பதவிகளில் சிலவற்றினையும், மு.கா. தலைவர் கைப்பற்றிக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 06 பேரைக் கொண்ட ஆளணி அலுவலர்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

– அஹமட் –
நன்றி

(Puthithu)

0 comments:

Post a Comment