July 04, 2018
மருத்துவமனையில் சிகிச்சைகள் நடக்கும், ஆபரேசன் நடக்கும் ஆனால் திருமணம்! அதுவும் நடந்துடுத்து!
கனடாவிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில் சந்தித்துக் கொண்ட ரிபாத் என்கிற பங்களாதேஷ் மணமகனுக்கும் ஸனா என்கிற பாகிஸ்தானிய மணமகளுக்கும் எதிர்வரும் எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நிக்காஹ் செய்திட சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டு கனடாவின் டோரன்டோ நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் சுமார் 200 உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதியன்று ரிபாத்தின் தந்தை ஷஹாதத் சவுத்ரி என்பவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பர்துபை, அல் மன்கூல் பகுதியிலுள்ள அஸ்டர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இன்னும் செயற்கை சுவாச சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் எங்கு விமானப் பயணம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டவுடன் மணமக்கள் கனடாவிலிருந்து துபைக்கு வரவழைக்கப்பட்டு அஸ்டர் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தந்தையின் முன் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.
இத்திருமணத்தின் விருந்தினர்களாக அஸ்டர் மருத்துவமனையின் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர ஊழியர்களுடன் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான உறவினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருமணத்திற்கு திட்டமிட்ட தேதியான ஜூலை 17 அன்று அதே ஹோட்டலில் உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் முன் திருமண வரவேற்பு நடைபெறும் என தெரிவித்ததுடன் திருமணத்திற்கு வர இயலாத நிலையிலுள்ள எங்களின் தந்தைக்காக திருமணத்தையே இங்கு கொண்டு வந்து விட்டோம் என பூரிக்கின்றார் புதுமாப்பிள்ளை ரிபாத்.
மருத்துவமனையில் நடைபெற்ற முதல் திருமணம் என்று துபை வரலாற்றில் பதிவான ஒன்றாக அமைந்துவிட்டது இந்தத் திருமணம்.
0 comments:
Post a Comment