July 8, 2018
அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும் இன்றைய அரசியல் களத்தில் ஒரு புது சக்தியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய இவர்களது உண்மையான நோக்கம் எதுவென்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியில் பிரிவினையை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைப்பது இவர்களது மறைமுக நோக்கம் என கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சிலர் இவர்களுக்கு எதிராக ஆரம்பத்தில் கருத்துக் கூற ஆரம்பித்தனர்.
கடந்த மூன்று வருட காலமாக அரசாங்கத்துடன் இணைந்து வரப்பிரசாதங்களை அனுபவித்து விட்டு, கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவைக் கண்டதும், தாம் அரசாங்கத்துடன் இருந்தால், தமது அரசியல் முகவரியைத் தொலைத்து விடுவோம் என்று எண்ணியதன் விளைவே இவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான காரணம் என்றும் மற்றுமொரு புறத்திலிருந்து கருத்துக்கள் எழுந்தன.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கொள்கையளவில் பாரிய வேறுபாடுகளைக் கொண்டவை. இந்த வேறுபாடுகளுடன் இணங்கிச் செல்வது சாத்தியமில்லாத ஒன்று என்பது யதார்த்தம். இந்த யாதார்த்தத்தின் விளைவாகவே, ஒரே அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மற்ற கட்சியினால் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அரசியல் மேடையில் பகிரங்கமாக விமர்ஷிக்க ஆரம்பித்தனர்.
கட்சியின் கொள்கை விமர்ஷனமாக ஆரம்பித்த இந்த விமர்ஷனம், பின்னர் தனிப்பட்ட நபர்களை விமர்ஷிக்கும் அளவுக்கு முற்றியது. இதனால், சிலரது கௌரவங்களையும் பாதிக்கும் அளவுக்கு விமர்ஷனங்கள் காராசாரமாகியது.
மஹிந்தவுக்காக தேர்தலில் வால்விடித்தவர்கள், அதிகாரத்துக்காக மைத்திரியுடன் ஒட்டிக் கொண்டிருப்பதாக மக்கள் மேடையில் பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
ஜனாதிபதியின் கருணையால் அமைச்சுப் பதவியைச் சுமந்து கொண்டிருப்பதாகவும் இவர்களுக்கு கூறப்பட்டது.
இதனால், கௌரவமாக அரசியலில் ஈடுபடுவோம். பதவியை விட தன்மானம்தான் முக்கியம் என இணைந்து தீர்மானிக்கப்பட்டதன் விளைவே 16 பேர் கொண்ட குழுவின் உருவாக்கம் என்பது நடைமுறை அரசியலுடன் ஒட்டியவர்களுக்கு தெரியும்.
நல்லிணக்க அரசாங்கம் உருவாகிய ஆரம்ப கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷாக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விமர்ஷனங்களை அவிழ்த்துவிட்ட இவர்கள், தேர்தல் முடிவொன்றைக் கண்டதன் பின்னர் தமது தீர்மானத்தை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கருணையில், இராஜாங்க அமைச்சர்களாகவும், அதிகாரமற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் இருப்பதை விட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கௌரவமாக ஒரு அரசாங்கத்தை அமைத்து பதவிக்கு வருவோம் எனவும் இவர்கள் கருதியிருக்கலாம்.
கௌரவமான அரசியல் செய்வதற்கு எதிர்பார்த்த இவர்களுக்கு நினைத்த பிரகாரம் வரவேற்பு காத்திருக்க வில்லை. கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள முதிர்ச்சியடைந்தவர்களும், பின்னாசன உறுப்பினர்களும் இவர்களை இரு தலைப் பாம்புகளாகவே பார்க்க ஆரம்பித்தனர்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் குழுவாக இணைந்து பொது மக்களின் வாழ்வுக்குப் பாதிப்பாகவுள்ள 21 அம்சங்கள் உள்ளடக்கிய கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிட்டனர்.
16 பேரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களையும் இப்பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கடந்த மே 21 ஆம் திகதி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த கொள்கைப் பிரகடனம் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வுகளை நாடு முழுவதும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் ஒரு சில செல்வாக்குள்ள இடங்களில் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டங்களுடன் முடிந்து விட்டன.
சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நிலைநாட்டுவதே தமது நோக்கம் என இக்குழுவிலுள்ள சந்திம வீரக்கொடி எம்.பி. கூறியிருந்தார்.
கடந்த ஜூன் 3 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்புக் குழுவில் இவர்களின் செயற்பாட்டுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும், ஜனாதிபதியிடம் இவர்களுக்கான வரவேற்பு கிடைக்கப் பெறவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 23 பேரையும் அரசாங்கத்திலிருந்து விலகுமாறு 16 பேரும் கோரினர். நீங்கள் என்னிடம் கேட்காமல் வெளியேறினீர்கள். அவர்களும் விரும்பினால், அரசாங்கத்திலிருந்து வெறியேறலாம். யாரையும் நிர்ப்பந்திக்க மாட்டேன். கட்சியில் முன்னரைவிட ஜனநாயகம் உள்ளது என ஜனாதிபதி இவர்களுக்கு பதிலளித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் அமைக்கும் கனவை நனவாக்குவது அவ்வளவு சுலபமாக அமையவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கையையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே தமது கட்சியில் இடமிருப்பதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கடந்த மே 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவாக கூறியிருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் போன்ற அனைத்திலும் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் அவர் உறுதியாக அறிவித்திருந்தார்.
16 பேர் கொண்ட குழு எங்களுடன் இணைவதாக இருந்தால், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு தலைவரே இருக்க வேண்டும் எனவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பகிரங்கமாக கூறியிருந்தார்.
16 பேர் கொண்ட குழுவின் கனவு நனவாவது எப்படிப் போனாலும், ஒரு சில தினங்களாவது பேசு பொருளாக இருக்க தகுதியற்றுப் போனது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இவர்களது கருத்துக்கு முழுமையாகவே ஆப்பு வைத்து விட்டார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டங்களில் கலந்துகொள்வதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உட்பட அக்கட்சியின் ஏந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளக் கூடாது என கூட்டு எதிர்க் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 22 ஆம் திகதி கூட்டு எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. 16 பேர் கொண்ட குழுவிடம் அறிவித்திருந்ததாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இடமளிக்க முடியாது என பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர கடந்த 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படையாக கூறியிருந்தார்.
இந்த கூட்டு எதிரணியின் கருத்துக்கள் அத்தனைக்கும் செவிசாய்க்கும் விதமாக 16 பேர் கொண்ட குழு ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தது. அதனை தினேஷ் குணவர்தனவிடம் அக்குழு பின்வருமாறு அறிவித்திருந்தது.
அதாவது, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டணிகள் அனைத்தினதும் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக் கொண்டு அவரின் தலைமையில் செயற்படுவதற்கு தாம் தயார் என அக்குழுவின் உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த எம்.பி. கடந்த ஜூன் 22 ஆம் திகதி கூறியிருந்தார்.
அத்துடன், பொதுஜன பெரமுனவில் தமக்கு அங்கத்துவம் வகிக்க முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஒரு கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்ததன் பின்னர், வேறு ஒரு கட்சியில் இணைந்து கொண்டால் தமக்கு எதிராக அக்கட்சியினால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
இதனைக் கருத்தில் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டு எதிரணில் செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரிடம் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறாக, அரசாங்கத்துக்குள் இருந்தால் கௌரவம் பாதிக்கப்படும் என கருதி அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு கூட்டு எதிரணியில் ஓரளவு மந்தமான வரவேற்பே இதுவரையில் காணப்படுகின்றது.
அரசாங்கத்துக்குள் இருக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் கேட்ட குத்துவார்த்தைகள் இப்போது உள்வீட்டிலும் கேட்பது காதுகளுக்கு சிரமமாகவே காணப்படுகின்றது என்று வெளியில் உள்ள எவரும் உணர்ந்து கொள்வதற்கு வெகு நேரம் தேவையில்லை.
கடந்த மூன்று வருட காலத்தில் இந்த அரசாங்கத்துடன் இருந்து எல்லாவிதமான சுகபோகங்களையெல்லாம் அனுபவித்து விட்டு, தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருந்தால், அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் என்ற அச்சத்தினால் மஹிந்தவுடன் இணைந்து கொள்ள வந்துள்ளார்கள் என மஹிந்த அணியின் முக்கிய உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க எம்.பி. 16 பேர் கொண்ட குழு தொடர்பில் கருத்துத் தெரிவித்தமை ஊடகங்களின் கவனத்தை வெகுவாக இழுத்திருந்தது.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்வதாக ஊடகங்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்து வரும் இவர்களை, மஹிந்தவின் தலைமையை ஏற்று ஒரு பக்கத்துக்கு செயலாற்றுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். அது வரையில் தாம் அவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும் பிரசன்ன எம்.பி. மேலும் தெளிவாகவே கூறியிருந்தார்.
கௌரவத்தை எதிர்பார்த்து வந்த இவர்களில் சிலருக்கு ஆத்திரம் மேலிட்டது. இவர்களில் தயாசிறி ஜயசேகர 16 பேரில் எதிர்க் கருத்துக் கொண்டவராக சமூக மேடையில் ஆஜரானார்.
தான் ஒருபோதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை இழந்து வேறு ஒரு கட்சியில் அங்கத்துவத்தை எடுக்க மாட்டேன். எந்தவொரு தேர்தல் வந்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தே போட்டியிடுவேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சேர மாட்டேன் என தயாசிரிய ஜயசேகர கடந்த ஜூலை 2 ஆம் திகதி பொதுக் கூட்டமொன்றில் கூறியிருந்தார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவிலுள்ள தயாசிறி ஜயசேகரவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைய விரும்பம் இல்லையென்றால் தமக்கும் அவர் எத்தனைக்கும் தேவையில்லையென கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அதேதினம் அதிரடியாக பதிலளித்திருந்தார்.
தயாசிறி ஜயசேகர பொதுஜன பெரமுன கட்சியை ஒரு தடவை வேண்டாம் என்று கூறினால், நாம் அவரை 100 தடவைகள் வேண்டாம் எனக் கூறுகின்றோம் எனவும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. மேலும் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் வேண்டாம் என்று பதவியை துறந்து, எதிரணியுடன் சேர்ந்து சில தினங்களில் அதற்குள்ளும் பிழவு ஏற்பட்டு கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ள ஒரு நிலையில் 16 பேர் கொண்ட குழு காணப்படுகின்றது.
ஏனைய 15 பேரும் தாம் இப்போது 16 அல்ல 70 என எண்ணிக்கையில் தமது ஒற்றுமையைக் கூட்டிக் கூறினாலும் உள்ளே உள்ள புழுக்கம் வெடிக்கும் என்பதற்கான புகை தெரிய ஆரம்பித்துள்ளது.
கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தனித்தனியே செயற்பட்டு வருகின்றன. விமலின் அணி, வாசுவின் அணி, கம்மம்பில அணி, தினேஷ் அணி, பொதுஜன ஐக்கிய முன்னணி அணி என அவை காணப்படுகின்றன. இந்த அணியுடன் ஏன் எம்மையும் ஒரு அணியாக எதிரணியிலுள்ளவர்களால் பார்க்க முடியாது என தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளதானது வெளிப்படையில் நியாயம் என்றே கூறவேண்டும்.
கூட்டு எதிரணியிலுள்ள மாற்றுக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்கள் எவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் எடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ கூட அதில் அங்கத்துவம் வகிக்க வில்லை. இவ்வாறிருக்கையில் எம்மை மாத்திரம் அக்கட்சியில் அங்கத்துவம் வகிக்க நிர்ப்பந்திப்பது நியாயமற்றது எனவும் 16 பேர் குழுவிலுள்ள தயாசிறி ஜயசேகர வினா எழுப்பியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி தனது கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களை ஆறுதல்படுத்த பல்வேறு வகையிலும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றால், பேயுடனும் கூட்டுச் சேருவோம் என மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. கூறியிருந்தார்.
இருப்பினும், இந்த 16 பேரும் கூட்டு எதிரணியில் சேர்ந்தால், எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது எதிர்க் கட்சியில் நீண்ட காலம் பல்வேறு சவால்களையும் சந்தித்து அரசாங்கத்தின் அசௌகரியங்களை எல்லாம் சுமந்துகொண்டு புதிய அரசாங்கம் அமையும் வரை காத்திருப்பவர்களின் உள்ளங்களில் “இலவு காத்த கிளியாகுமா” என்ற பயம் மறைந்துள்ளது என்பது மேடையேறும் பேச்சுக்களில் புரிகின்றது.
அதேபோன்று மூன்று வருடம் வரப்பிரசாரதங்களை அனுபவித்து விட்டு வந்த 16 பேருக்கும் தேர்தலின் போது கூட்டு எதிர்க் கட்சி வேட்பாளர் பட்டியலில் எதிர்பார்க்கும் இடம் கிடைக்காமலும் போகலாம். (முற்றும்)
கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி
DailyCeylon

0 comments:
Post a Comment