Monday, June 11, 2018

மண்ணெண்ணெய் விலை நள்ளிரவூ முதல் குறைப்பு


 June 12, 2018





* அரசுக்கு லீற்றர் ஒன்றுக்கு 30 ரூபா இழப்பு
* பாவனை அதிகரித்தால் மேலும் நஷ்டம்

மீனவர் போராட்டம் முடிவு

மண்ணெண்ணெய் விலை இன்று நள்ளிரவுடன் 70 ரூபாவாக குறைவடையுமென நிதி அமைச்சு தெரிவிக்கிறது. மக்களின் நலன் கருதி லீற்றர் ஒன்றின் மண்ணெண்ணெயை 70 ரூபாவாக குறைக்கின்ற போதும் இதனால் அரசாங்கத்துக்கு 30 ரூபா வீதம் நட்டம் ஏற்படுவதாகவும் நிதி அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் நாளொன்றுக்கு 5.7 மில்லியனிலும் அதிக பெறுமானம் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மண்ணெண்ணெய் விலை குறைவடைவதனால் அதன் பாவனை அதிகரிக்குமென்றும் இதனால் அரசாங்கத்துக்கு பாரிய இழப்பை சந்திக்க நேரிடுமென கணக்கிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மே மாதம் 10 ஆம் திகதியன்று 44 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இதனால், பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு லீற்றருக்கு 100 ரூபா வீதம் நட்டத்தை சந்திக்க நேரிட்டது. அத்துடன் வெளிநாட்டில் மண்ணெண்ணெய்க்கான விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் மாதத்துக்கு ஒரு பில்லியன் ரூபா வீதம் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ், லொறி ஆகிய வாகனங்களுக்கு அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய் உபயோகிக்கப்படுத்தப்பட்டதனால் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் மண்ணெண்ணெய் பாவனை 41 சதவீத அதிகரிக்கப்பை எட்டியுள்ளது.

எவ்வாறானபோதும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 70ரூபாவுக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கத்துக்கு 30 ரூபா நட்டம் ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு பயன்படுத்தப்பட்ட 600 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் விலையதிகரிப்புடன் 150 மெற்றிக் தொன்னாக குறைவடைந்துள்ளது. எனினும் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மண்ணெண்ணெய் விலை குறைப்புடன் மீண்டும் மண்ணெண்ணெய் பாவனை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

மக்களின் நலன் கருதி மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு நேற்று நிதி அமைச்சினால் அமைச்சரவைக்கு பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை நிதி அமைச்சு ஆரம்பத்தில் லீற்றர் ஒன்றுக்கான மண்ணெண்ணெயின் விலையை 75 ரூபாவாக குறைப்பதாக கூறியிருந்தபோதும் மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் மற்றும் நீரியல்வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதாரச்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதனை 70ரூபாவுக்கு பெற்றுத் தருவதற்கு நிதி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மண்ணெண்ணெய் விலைக் குறைப்பைக்கோரி சிலாபத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வந்த சிலாபம் மீனவ சங்கத்தின் தலைவர் போல் ஜோசப் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் செவ்வாய்க்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை 70 ரூபாவுக்கு குறைக்கப்படாவிடின் சாகும்வரை தமது போராட்டம் தொடருமென்றும் தெரிவித்தார். கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா நேற்று மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை 70 ரூபாவாக குறைவடையுமென்றும் படகுக்கு பயன்படுத்தப்படும் ஏனைய எண்ணெய்களின் விலைகளை குறைப்பதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறினார்.

0 comments:

Post a Comment