Monday, June 11, 2018

ஜனாதிபதி கனவுடன் கோட்டா; முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டுவதுபோல் பெரு நடிப்பு


June 12, 2018





மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்களை எவராலும் மறைக்க முடியாது என்றும் எதிர்காலத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாவதற்கு கனவு கண்டுகொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முஸ்லிம் மக்கள் மீது கரிசனை காட்டுவதுபோல நடித்து வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் ஆதரவை தேடி கோத்தாபய ராஜபக்ஷ ஆரம்பித்திருக்கும் அரசியல் நகர்வு தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எதிர்காலத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு கனவு கண்டுகொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முஸ்லிம் மக்களுடன் நட்புறவுடன் இருப்பதுபோன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகிறார். ஒருசில முஸ்லிம் நபர்களுடன் இணைந்து ரமழான் இப்தார் நிகழ்ச்சிகளில் கோட்டாபய பங்குபற்றி வருவதோடு, முஸ்லிம் மக்கள் மீது கரிசனை காட்டுவதுபோல நடித்தும் வருகிறார்.

அண்மையில் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ இனிவரும் ராஜபக்ஷக்களின் ஆட்சியில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கூற்றே இவர்களது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மீது அட்டுழியங்களை கட்டவிழ்த்து விட்டார். முஸ்லிம் வர்த்தகர்களை கடத்துவது முதல், முஸ்லிம் மக்களின் மத வழிபாடுகளை தடுக்கும் நோக்கில் 'கிரீஸ்யகா' என்ற பீதியைக் கிளப்பும் மனிதன் மூலம் முஸ்லிம்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தி அச்சுறுத்தி முஸ்லிம்களை பீதியடைய வைத்தார். கோட்டாபய ராஜபக்ஷ என்ற இந்த மனிதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்களையும், அச்சுறுத்தல்களையும், அடக்குமுறைகளையும் இலகுவில் மறந்து விட முடியாது.

மஹிந்த ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் அனுசரணையில் மற்றும் பூரண ஆதரவுடன் இனவாத சக்திகள் புற்றீசல்களாய் பிறப்பெடுத்தன. முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான துவேச பிரசாரங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் பணியை தனது அதிகாரத்தை வைத்து கோட்டாபய திட்டமிட்டு செயற்படுத்தினார்.

இந்த இனவாத தூண்டுதலின் பிரதிபலனாக முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டன. இவரினால் வளர்க்கப்பட்ட இனவாத தீய சக்திகளின் மோசமான செயற்பாடுகளினால் தர்காநகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாகின. முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளைக தூண்டும் எல்லே குணவன்ஸ தேரோ, அபயதிஸ்ஸ தேரோ, இத்தபானே சத்தாதிஸ்ஸ தேரோ போன்றவர்கள் கோட்டாபய வின் அமைப்பில் முக்கிய அங்கத்தவர்களாக இருக்கின்றனர். கோட்டாபய வின் காலத்தில் பொதுபலசேனா அமைப்பு தம்மை உத்தியோகபற்றற்ற பொலிஸ் என அழைத்துக்கொண்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டது. முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கி தீவைத்து அழித்தது. இன்று முஸ்லிம்கள் மீது இரக்கம் காட்டுவதாக நடிக்கும் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய அன்று இவற்றை அமைதியாக பார்த்து இரசித்துக்கொண்டு இருந்தார்.

இன்று முஸ்லிம்களுடன் நட்புடன் இருப்பதாக காட்டுவதற்கு முற்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இந்த இனவாத சக்திகளுக்கு உயிரூட்டி, பின்னணியில் இருந்து செயற்பட்டவர் என்பது உலகறிந்த உண்மையாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சார்ந்துள்ள பொது எதிரணியின் பாராளுமன்ற அங்கத்தவர்களே இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.



0 comments:

Post a Comment