June 16, 2018
ஜனாதிபதி பெருநாள் வாழ்த்து
ஈதுல் பித்ர் எனும் ஈகைத்திருநாள் மூலம் உலக நியதியை உள்வாங்கிய செய்தியினை எமக்கு உணர்த்தி நிற்கின்றது. சமாதானம், நல்லிணக்கம் மேலோங்க இந்தச் செய்தியொன்றே போதும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:-
மானிட வர்த்தகத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்வதே முதன்மைத் தேவையாக அமைகின்றது. சமூகத்திற்கு ஒவ்வாத எவ்வாறான செயல்களினதும் ஆரம்ப கரு மனித மனங்களிலேயே உதிக்கின்றது. அந்த வகையில் மானிட வர்க்கத்தின் விடுதலையும் நலனும் மனித நேயம்மிகு நற் சிந்தனைகள் வளமாகவும் பலமாகவும் அமையும் பின்னணியிலேயே உருவாகின்றது.
உலக வாழ் முஸ்லிம்கள் ஒரு மாத காலம் நோன்பு நோற்று தியாகத்தையும் சமாதானத்தையும் நன்மதிப்பையும் முதன்மைப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் மூலம் இந்த உன்னதமான செய்தியினையே உலகிற்கு எடுத்துரைக்கின்றார்கள்.
அது உலக நியதியை உள்வாங்கிய செய்தியாகும். உலக வாழ் மக்களின் நலனும் அவ்வாறான நற் செய்திகளின் பொருளைப் புரிந்து மற்றவர்களோடு ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்விலேயே தங்கியிருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் பெரும் இக்கட்டான நிலைமையை சந்தித்திருக்கும் தற்கால உலக சமூகங்களுக்கிடையில் நல்லொழுக்கத்தையும் நேசத்தையும் நீட்டி நேர்மையாக நடந்துகொள்வதிலேயே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் இதமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதையே ரமழான் நோன்பு எமக்கு கற்றுக்கொடுக்கின்றது.
வெறுமனே வேதம் என்ற எல்லையைக் கடந்து உன்னதமான மனிதத்துவத்துடன் உறவாடும் நேர்மையான நோக்கைக்கொண்ட இலங்கையருக்கும் உலக வாழ் இஸ்லாமியருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
0 comments:
Post a Comment