23.11.2018
“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றினாலோ அல்லது புதிய அரசாங்கம் தங்களுக்குரிய பெரும்பான்மை சக்தியை நிரூபித்தாலோ நான் மகிழ்ச்சியடைவேன்” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு பின்னர் இன்று கூடிய பாராளுமன்றில் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு 121 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய பாராளுமன்ற செயற்பாடு குறித்து சபாநாயகர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து இலகுவாக நிறைவேற்ற முடியும் எனில் அவ்வாறிருக்க பலாத்காரமாக சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு சபை நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தி பாராளுமன்றில் வாக்கெடுப்பு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது பலனற்ற செயல்களாகும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 கட்சிகளில் 4 கட்சிகளின் 122 உறுப்பினர்கள் தற்காலிக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நம்பிக்கையில்லா பிரேரணை மூலமும் எழுத்து மூலமும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு செவி சாய்க்க வேண்டிய கடப்பாடு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இருப்பதாகவும் தான் ஒரு போதும் கட்சி சார்பானவராக செயற்பட்டதில்லை எனவும் தெரிவித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment