Sunday, November 11, 2018

ஏழு தமிழர்களின் விடுதலை பரிந்துரை கடிதம் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

11.11.2018

ரஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட விடுதலை பரிந்துரை கடிதத்தை, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் நிராகரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய குடியரசுத் தலைவரை கோரி, தமிழக அரசாங்கத்தினால் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த கடிதத்திற்கு இந்த வருடம் ஏப்ரல் 18 ஆம் திகதி இந்திய உள்துறை அமைச்சினால் பதில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதில், ரஜீவ் காந்தி உள்ளிட்ட 15 பேரை கொலை செய்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவித்தால், அது தவறான முன்னுதாரணமாக அமையும் என கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பேரறிவாளனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம், தமிழக அரசின் கோரிக்கை எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது? என இந்திய குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கியுள்ள, இந்திய குடியரச தலைவர் அலுவலகம், தங்களுக்கு அவ்வாறான எந்த கடிதமும் கிடைக்கவில்லையென குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட 7 பேரின் விடுதலையை கோரிய கடிதம் குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கப்படாமல் அமைச்சகத்தின் உயர் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இலங்கை விடயத்தில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸூம் ஒரே நிலைப்பட்டையே கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment