July 8, 2018
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றுக்கு, 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சீன துறைமுக நிறுவனமொன்று வழங்கியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவுக்கு குறித்த நிறுவனம் வழங்கிய காசோலை ஒன்றினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையினை அடுத்து, இது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் என்ற நிறுவனம் 2012ஆம் ஆண்டு புஸ்பா ராஜபக்ஷ மன்றத்துக்கு 19,410,000 ரூபா பெறுமதியான காசோலையை வழங்கியுள்ளது.
21 மே 2012 திகதியிடப்பட்ட குறிப்பிட்ட காசோலை கொமேர்சல் வங்கியில் உள்ள புஸ்பா ராஜபக்ஷ மன்றத்தின் பெயருக்கு அனுப்பபட்டுள்ளது.
மேற்படி கொழும்பு இன்டநசனல் நிறுவனமானது, கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில் கூட்டு முயற்சியில் தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் 85 வீத பங்குகள் ஹொங்கொங்கை தளமாக கொண்ட சி.எம். போட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
இந்த பணப்பரிமாற்றம் தொடர்பில் நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேட பொலிஸ் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாகவும்,கொழும்பு நீதிமன்றமொன்று இது குறித்த ஆவணங்களை பொலிஸாரிடம் கையளிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக, அவ்வேளை நீதிமன்றத்திடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் வங்கிகள் உட்பட பலரிடம் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதிக்குற்றங்கள் தொடர்பிலான விசேட பொலிஸ் பிரிவினர் ‘பி’ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், விசாரணை அறிக்கையை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஏற்கனவே வழங்கிவிட்டனர்.
ஆனால் அங்கிருந்து ஆலோசனைகள் எவையும் வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புஸ்பா ராஜபக்ஷ – ஓரு சட்டத்தணியென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி
புதிது
0 comments:
Post a Comment