Wednesday, July 4, 2018

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் நிந்தவூரில் தற்கொலை !

July 04, 2018
 

பிரபல வர்த்தகரும், எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான காத்தநகர் புஹாரி எம்.இப்றாகீம் நிந்தவூர்-05ம் பிரிவில் அவருக்குச் சொந்தமான வீட்டில் (03) மாலை தூக்கிட்டு; தற்கொலை செய்துள்ளார்.

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் வர்த்தக நோக்கமாக நிந்தவூர் பிரதேசத்தில் குடியேறி, பின்னர் குடும்பத்தோடு, நிரந்தரமாக வாழ்ந்து வந்தவராவார்.

இவர் நிந்தவூர் பிரதேசத்தில் பெரும் வர்த்தகராகத் திகழ்ந்ததோடு, எழுத்துப்பணி, கலை இலக்கியப்பணி, சமூகசேவை, ஹோமியோபதி வைத்தியம், நியுமரோலஜி நிபுணத்துவம் போன்ற பல்வேறு ஆளுமை கொண்ட மனிதனாகத் திகழ்ந்தார்.

20க்கு மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரரான இவர், இறுதிக் காலத்தில் நிந்தவூர் மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாசலிலும், அங்குள்ள குர்ஆன் மத்ரசாவிலும் இலவசமாக சிறிது காலம் சிறுவர்களுக்கு குர்ஆன் பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும் அறிய முடிகிறது.

இவ்வாறு நிந்தவூரில் ஒரு புரட்சிகரமான மனிதனாகத் திகழ்ந்த டாக்டர். புஹாரி எம்.இப்றாகீம் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் மனநோயினால் பாதிக்கப்பட்டதாகவும், புத்திசுவாதினமற்ற நிலையில் வீட்டிலேயே வைத்தியம் செய்து வாழ்ந்து வந்ததாகவும், தனிமையில் இருந்த வேளை இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகைதந்த சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.பசீல் விசாரணைகளை நடாத்திய பின்னர் ஜனாசாவை நல்லடக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.

சம்மாந்துறைப் பொலிசாரும், அம்பாறைப் பிராந்திய விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

ஜனாசா நேற்றிரவு(11.30) மணியளவில் நிந்தவூர் மஸ்ஜிதுல் றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Thanks
(நிந்தவூர் விசேட நிருபர்)

0 comments:

Post a Comment