Tuesday, June 12, 2018

அரசு தனது பலத்தை தக்கவைக்க புதிது புதிதாக அமைச்சுப் பதவிகள்

.

June 13, 2018








நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்குப் புதிது புதிதாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது.

அரசாங்கம் மக்கள் பற்றி துளியளவும் சிந்திக்காது அமைச்சுப் பதவிகளை அதிகரித்து வருவதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரும், தொழிற்சங்கத் தலைவருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், கடன்சுமை அதிகரித்துள்ள நிலையில் எதுபற்றியும் கவலைப்படாது அரசாங்கம் புதிது புதிதாக அமைச்சுப் பதவிகளை வழங்குகிறது. அரசாங்கத்தில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கே இவ்வாறு பதவிகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார். ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புதிதாக பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்துக்குள் நாட்டை அபிவிருத்திசெய்திருக்கலாம். இதனைவிடுத்து நாடு பல்வேறு நெருக்கடிக்குள் முகங்கொடுத்துள்ள நிலையில் ஏன் அரசு இன்னமும் புதிய அமைச்சர்களை நியமிக்கிறது என்றும் கேள்வியெழுப்பினார்.

நாட்டின் கடன்சுமையைக் கூட இந்த அரசாங்கத்தினால் சரியாகக் கூறமுடியாதுள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் ஒரு எண்ணிக்கையைக் கூறுகிறார், மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மற்றொரு எண்ணிக்கையைக் கூறுகிறது.

20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு வாக்களிப்பதா, இல்லையா என்ற குழப்பம் மறுபக்கத்திலும் இருக்கும் நிலையில், புதிதாக அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசு நிலைப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் செய்துவருகிறது.



தினகரன்
மகேஸ்வரன் பிரசாத்

0 comments:

Post a Comment