Friday, November 2, 2018

த.தே.கூட்டமைப்பின் இரண்டாவது கூட்டத்திலும் தீர்மானம் இல்லை

02.11.2018

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக இன்று இரண்டாவது தடவையாக இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படாமல் முடிவடைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலைமைகளில் எந்த தரப்புக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

எனினும், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மீண்டும் கூடி ஆராய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையுடன் தீர்மானிக்க வேண்டும் என சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் இந்த விடயத்தில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான எழுத்து மூல உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், பசுமை எதிர்காலத்துக்கான நிலையம் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு முதலான எட்டு சிவில் அமைப்புகள் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை வேதன உயர்வுக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

0 comments:

Post a Comment