Friday, July 6, 2018

முதலாவது விசேட மேல்நீதிமன்றின் பணிகள் 14 நாட்களுக்குள் ஆரம்பமாகும் – நீதி அமைச்சர்

July 6, 2018

சர்ச்சைக்குரிய நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரிதகதியில் விசாரிப்பதற்கான விசேட மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும்” என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, “ஊழல், மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு விடுத்துவிட்டே ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சொல்லில் காட்டும் ஆர்வத்தை இந்த அரசு செயலில் காட்டுவதில்லை. இந்நிலையில், விசேட மேல் நீதிமன்றங்கள் மூன்று அமைக்கப்படும் என அறிவிப்பு விடுத்தீர்கள். அதற்கு என்ன நடந்துள்ளது?” என்று ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மூன்று நீதிமன்றங்களில் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேவையான சட்டங்களை இயற்றுதல், வழக்கு விசாரணைகளுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளையே நீதி அமைச்சால் செய்யமுடியும். வழக்குத் தொடுப்பதற்குரிய பணியை சட்டமா அதிபர் திணைக்களமே முன்னெடுக்கும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அதிகாரிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. புதிதாக ஆட்களை இணைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.

மூன்று மேல் நீதிமன்றங்களை அமைப்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல. கொழும்பு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் போக்குவரத்து நீதிமன்றத்தைப் பிறிதொரு இடத்தில் அமைத்துவிட்டே முதலாவது நீதிமன்றத்தை அமைக்க அந்தக் கட்டடம் பெறப்பட்டது.

இம்மாதம் 4ஆம் திகதி முதலாவது நீதிமன்றம் திறக்கப்படவிருந்தாலும், கூரைகளை மாற்றவேண்டியுள்ளது என்றும், அதைச் செய்த பின்னரே கட்டடம் ஒப்படைக்கப்படும் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இன்னும் இரண்டு வாரங்களில் கட்டடம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். அதன் பின்னர் பணிகள் ஆரம்பமாகும்.
மூன்று மேல் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. ஒரு நீதிமன்றத்துக்குரிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
.

0 comments:

Post a Comment