July 09, 2018
இராஜதுரை ஹஷான்
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் புதிய தேர்தல் முறைமையினை
உருவாக்க வாக்களித்தவர்கள் இன்று சில வரையறுக்கப்பட்ட விடயங்களுக்காக அதனை எதிர்ப்பது வேடிக்கையாகவுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தல்கள் இவ்வருடத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. ஆனால் ஆரம்பத்தில் புதிய தேர்தல் முறைமை உருவாக்கத்திற்கு வாக்களித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்கியவர்கள் இன்று சில வரையறுக்கப்பட்ட விடயங்களை காரணம் காட்டி புதிய தேர்தல் முறைமையினை எதிர்ப்பது வேடிக்கையாகவே காணப்படுகின்றது.
புதிய தேர்தல் முறைமையின் காரணமாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எவ்வித அநீதிகளும் ஏற்படாது . தேர்தல் காலதாமதம் ஆக்கப்பட்டு வருகின்றது என்ற காரணத்தினால் ஜனநாயக முறைமைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பழைய முறைமைக்கு ஒரு போதும் மீள் திரும்ப முடியாது.
ஆகவே மாகாணசபை தேர்தலை சிறுபான்மை மக்களை காரணம் காட்டி சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக ஜனநாயக கொள்கையினை மீறுவதற்கு உடந்தையாக செயற்பட முடியாது.
புதிய தேர்தல் முறைமையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபை தேர்தலை இவ்வருடத்திற்குள் நடத்த முடியும் என்றார்.
0 comments:
Post a Comment