05.07.2018
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமென்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பிலான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவற்றை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று இவ்வாறு குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விசாரணைகள் குற்றவியல் விவகாரங்களைக் கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் கீழ், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவூடாக செய்யப்படவுள்ளன. இதற்கான ஆரம்பகட்ட விசாரணை நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் குறித்த உரை தொடர்பில், முதல் கட்டமாக எவ்வித மாற்றங்களையும் செய்யாத காணொலிகளைப் பெற விசாரணையாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் இதனைவிட அவர் குறித்த உரையை ஆற்றும் போது அங்கிருந்தவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சாட்சிகளையும் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்துகொண்டுள்ளதால் அவரை உடன் கைது செய்யுமாறு சிங்ஹல ராவய முறைப்பாடு ஊடாக பொலிஸ் மா அதிபரைக் கோரியிருந்தது.
அத்துடன் அரசியலமைப்பை மீறும், பயங்கரவாத தடைச் சட்டம், தண்டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புரிந்துள்ளதாகக் கூறி அவரை உடன் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உண்மையை கண்டறியும் அமைப்பு சார்பில் சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்தவும் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடளித்திருந்தார்.
இதனைவிட பிவிதுரு ஹெல உருமயவும் விஜய கலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடளித்திருந்தது. இந்த அனைத்து முறைப்பாடுகளையுமே பொலிஸ் மா அதிபர் நேற்று குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் ஒப்படைத்து விசாரணைகளை நடாத்த உத்தரவிட்டுள்ளார்.
-Vidivelli
0 comments:
Post a Comment