11.11.2018
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்து அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக புதிய பெருந்தோட்டதொழில் அமைச்சரான எஸ்.எம்.சந்தரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் தொழில் அமைச்சருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக எஸ்.எம்.சந்ரசேன பதவியேற்றுள்ள நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை வேதன அதிகரிப்பு குறித்து எமது செய்திச் சேவை வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு கோரிக்கையானது நியாயமானது என்றும், அதனைப் பெற்றுக் கொடுக்க தாம் முயற்சிப்பதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார்.
இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களது நாளாந்த வேதனம் குறித்த தங்களது முன்மொழிவை கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களிடம் எதிர்வரும் திங்கட்கிழமை முதலாளிமார் சம்மேளனம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக மூன்று கட்ட பேச்சுவார்தைகள் இடம்பெற்றுள்ளன.
எனினும், இந்த விடயத்தில் தற்போதுவரை இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக 600 ரூபா உட்பட ஏனைய கொடுப்பனவுகளுடன் நாளாந்தம் 940 ரூபாவையே வேதனமாக வழங்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நாளைய தினம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை உத்தியோகபற்றற்ற வகையில் சந்திக்கவுள்ள முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், தங்களது புதிய வேதன முன்மொழிகவுகளை அவரிடம் வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment