Saturday, November 3, 2018

மஹிந்தவுக்கு எதிராக வாக்களிப்போம் – த.தே.கூ எழுத்தாளர்


03 Nov, 2018

அரசியலமைப்பை முற்றிலும் மீறும் வகையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கதிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நடுநிலை வகிப்பதென்பது, அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்ககூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே தமது நிலைப்பாடு எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுக்கு இடையில் நேற்று மாலை நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி பிரதமரை நீக்குவதாகவும், புதிய பிரதமரை நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணான சட்டவிரோத செயல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து, பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி விடுத்த பிரகடனத்தை ஜனநாயக விரோத செயலாகவும், பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மையை பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குவதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்து, அவருடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவையை தாமதிப்பதற்கும், முறியடிப்பதற்கும் ஏதுவான காரணியாகவே இதனை கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால நீடிப்பை பயன்படுத்தி அமைச்சு பதவிகளையும், பணத்தையும் இலஞ்சமாக வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு இழுத்தெடுத்து, பெரும்பான்மையை கபடமாக பெற்றுக் கொள்ள முன்னெடுக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இந்த சதி முயற்சிக்கு பலியானதை கடுமையாக கண்டிப்பதோடு, எதிர்ப்பையும் வௌியிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும், கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fazlullah Mubarak

News First

0 comments:

Post a Comment