09 NOVEMBER 2018
நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் , புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக உதய கம்மன்பில ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, வீடமைப்பு மற்றும் சமுக நலன்புரி அமைச்சராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
இதன்படி இதுவரையில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள 24 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.
அதேநேரம், 21 அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் கீழ் இருந்த காவற்துறை திணைக்களம், ஜனாதிபதியால் வகிக்கப்படுகின்ற பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேநேரம் பொதுநிறுவனங்கள் அமைச்சின் கீழ் இருந்த அனைத்து அரச வங்கிகள் மற்றும் அதன் உப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் இருந்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் நிதி அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுநிறுவனங்கள் அமைச்சின் கீழ் இருந்த ஶ்ரீலங்கன் மற்றும் மிகின் லங்கா விமான சேவைகள் என்பன, போக்குவரத்து அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment