Monday, June 18, 2018

யாழ் துப்பாக்கிச் சூடு – மல்லாகம் நீதவானின் அதிரடி உத்தரவு

18 JUNE 2018

யாழ்ப்பாணம் - மல்லாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று இரவு நீதிபதி, பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணைகளின் பிரகாரம் காவல்துறை அதிகாரியை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்விற்கு வந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அங்கு வந்த காவல்துறையினர் மோதலை கட்டுப்படுத்த முனைந்தபோது, காவல்துறையினரின் துப்பாக்கியை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மோதலுடன் தொடர்புபடாத இளைஞர் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருக்கும் பொதுமக்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில், மல்லாகம் - குளமங்கால் பகுதியை சேர்ந்த 28 வயதான பாக்கியராஜா சுதர்சன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment